ஈரான் போர் பல கோடி பேருக்கு உணவு மற்றும் மருந்துகள் சென்றடைவதை தடுக்கிறது: தொண்டு அமைப்புகள் கவலை

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் எண்ணெய், எரிவாயு விநியோகம் மட்டுமின்றி தொண்டு அமைப்புகளுக்கான விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, அதிக செலவு, தாமதமாகும் மாற்று பாதைகளை பயன்படுத்த கட்டாயத்திற்கு தள்ளியிருக்கிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட சூடானுக்காக ஒதுக்கப்பட்ட 1,30,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துகள் துபாயிலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சோமாலியா குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 670 பாக்கெட் நோய்தீர்க்கும் உணவுகள் இந்தியாவிலும் சிக்கி இருப்பதாக சர்வதேச மீட்பு குழு கூறி உள்ளது.

16 நாடுகளுக்கு உதவி உபகரணங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐநா மக்கள் தொகை நிதியம் கூறுகிறது. யுனிசெப் அமைப்பு, உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக விமானம் மூலம் ஈரானுக்கு தடுப்பூசிகளை அனுப்பிய நிலையில், இப்போது தடுப்பூசிகளை துருக்கிக்கு விமானத்தில் கொண்டு சென்று, அங்கிருந்து ஈரானுக்குள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்கிறது. இதனால் செலவுகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், விநியோக நேரம் 10 நாட்கள் கூடுதலாகியுள்ளதாகவும் கூறுகிறது.

சோமாலியாவில் சுமார் 65 லட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகள் உயர்ந்துள்ளதாகவும், இதனால் மக்கள் சிகிச்சை பெறுவது கடினமாகி வருவதாகவும் டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. நைஜீரியாவில், எரிபொருள் விலைகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், ஜெனரேட்டர்கள் போன்ற உபகரணங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் மருத்துவமனைகள் சிரமப்படுவதாகவும், நடமாடும் சுகாதாரக் குழுக்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துள்ளதாகவும் சர்வதேச மருத்துவக் குழு கூறுகிறது.

சூடான் தனது உரத் தேவையில் பாதியையும், கென்யா சுமார் 40 சதவீதத்தையும் வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டுள்ள தொண்டு அமைப்புகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உரங்கள் விநியோகம் தாமதப்பட்டிருப்பதால் ஏழை நாடுகளில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றன. இந்தப் போர்ச் சூழல் ஜூன் மாதம் வரையிலும் நீடிக்குமேயானால், மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி பஞ்சத்துக்கு ஆளாவார்கள் என்று உலக உணவு திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories: