ஈரான், லெபனான் எல்லையில் 340 நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு

டெல் அவிவ்: ஈரான் மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஈரான் பகுதிகளில் உள்ள 70க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆளில்லா விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஈரான் மற்றும் லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் லெபனானில் உள்ள 140க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் நாட்டின் 200க்கும் மேற்பட்ட அரசு உள்கட்டமைப்பு மையங்கள் மற்றும் லெபனானில் உள்ள 140க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் நிலைகளை தாக்கி அழித்துள்ளோம். ஈரானிய புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான ஆயுதக் கிடங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தயாரிப்பு மையங்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத பயிற்சி மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவர்களின் முக்கிய பிரிவான ரத்வான் படையின் தலைமையகமும் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த ராணுவ நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘இந்த தாக்குதல் மூலம் ஈரானின் தொழில் துறைக்கு மிகப்பெரிய பேரிடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் 70 சதவீத உருக்கு உற்பத்தி திறன் அழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாடு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான நிதி ஆதாரமும், வசதியும் முடக்கப்பட்டுள்ளது. எங்களது நண்பரான அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருடன் இணைந்து ஈரான் தீவிரவாத ஆட்சியை நசுக்கி வருகிறோம். வடக்கு எல்லை மக்களை பாதுகாக்க லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீதான தாக்குதல் தொடரும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: