வாஷிங்டன்: தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ரினி சம்பத். இவர் தனது 7 வயதில் அமெரிக்கா சென்றார். தற்போது 31 வயதாகும் அவர் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் வாஷிங்டன் மேயர் பதவிக்கான போட்டியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம்தமிழ்நாட்டைச் சேர்ந்த ரினி சம்பத், வாஷிங்டன் மேயர் பதவிக்கான முதன்மைத் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,’நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் எந்தவொரு சிறப்பு நலன் குழுக்களுக்கும் கடன்பட்டவள் அல்ல. நமது நகரத்தின் அடிப்படை சேவைகளைச் சரிசெய்வதில் அயராது கவனம் செலுத்தும் ஒரு வெளியாளுக்கான நேரம் இது. வெற்றிக்கு நமக்கு ஒரு உண்மையான பாதை இருக்கிறது என்பது தெளிவாகிறது. வெறும் நான்கு வாரங்களில், வாஷிங்டன் வரலாற்றில் மேயர் பதவிக்கான வாக்குச்சீட்டில் இடம்பிடித்த முதல் தெற்காசிய வேட்பாளர் என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம். சிக்கனமான, மக்கள் சக்தியால் இயங்கும் ஒரு பிரச்சாரத்தால் இதைத்தான் சாதிக்க முடியும். நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடையத் தேவையான வளங்கள் இருந்தால், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்’ என்றார்.
* வாஷிங்டன் மேயர் பதவிக்கான போட்டியில் ரினி சம்பத்திற்கு எதிராக ஜேனீஸ் லூயிஸ் ஜார்ஜ், கென்யன் மெக்டஃபி, கேரி குட்வெதர், ராபர்ட் எல் கிராஸ் மற்றும் ரோண்டா ஹாமில்டன் ஆகியோர் உள்ளனர்.
* மேயர் பதவிக்கான முதன்மைத் தேர்தல் வருகிற ஜூன் 16ஆம் தேதியும், பொதுத் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
