கெய்ரோ: அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் தனது மஜித் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாயமான அமெரிக்க விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் நேற்று 35வது நாளை எட்டியது. ஒருமாதத்திற்கு மேலாக நடந்து வரும் இப்போரில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சமீபத்தில் பெருமை பேசியிருந்தன.
ஆனால், நேற்று முன்தினம் திடீர் திருப்பாக ஈரான் வான் பரப்பில் பறந்த 2 அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த எப்-15இ விமானம் கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தில் முதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஒரு விமானியை அமெரிக்க படைகள் மீட்டுள்ளன. மற்றொருவரை காணவில்லை. அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட 2 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும் பாரசீக வளைகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ-10 ரக அமெரிக்க போர் விமானத்தையும் ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. பொதுவாக எப்-15இ போன்ற சக்திவாய்ந்த விமானங்களின் பறக்கும் வேகம் மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் ஆகியவற்றால் அவற்றை வீழ்த்துவது சவாலான காரியம்.
ஆனால் மஜித் எனும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம்அமெரிக்க போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு அமெரிக்காவின் அவென்சர் மற்றும் ரஷ்யாவின் பன்ட்சர்-எஸ்1 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையானது. மஜித் வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் கடந்த 2021ல் உருவாக்கியது.
இதற்கிடையே, புதிய வான் பாதுகாப்பு அமைப்பு களமிறக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் தங்கள் நாட்டின் வான்பரப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஈரான் ராணுவ தளபதி ஒருவர் கூறி உள்ளார். மாயமான அமெரிக்க விமானியை அமெரிக்காவும், ஈரானும் மிகத்தீவிரமாக தேடி வருகின்றன. அவரை கண்டுபிடித்தால் 60,000 டாலர் (சுமார் ரூ.60 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என பொதுமக்களுக்கு ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
* புஷேர் அணுசக்தி நிலையம் 4வது முறையாக தாக்குதல்
அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் 4வது முறையாக ஈரானின் புஷேர் அணுசக்தி நிலையம் மீது நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் துணை கட்டிடம் சேதமடைந்ததாகவும் ஈரான்
தெரிவித்துள்ளது.
* இன்னும் 48 மணி நேரம்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரான் ஒப்பந்தம் செய்ய அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்திற்குள் அவர்கள் மீது நரகம் இறங்கும். கடவுளுக்கே மகிமை’’ என எச்சரித்துள்ளார். ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் குறித்து டிரம்ப் நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
* அமெரிக்காவை கேலி செய்த ஈரான்
ஈரான் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது எக்ஸ் தளத்தில், ‘‘தொடர்ந்து 37 முறை ஈரானை தோற்கடித்துவிட்டதாகவும், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறி வந்தார். ஆனால், இப்போது யாராவது எங்கள் விமானிகளைக் கண்டுபிடித்து தர முடியுமா என்று கெஞ்சும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
இது நம்பமுடியாத முன்னேற்றம்’’ எனக் கூறி அமெரிக்காவை கிண்டலடித்து உள்ளார். இதே போல, அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகத்தை கேலி செய்த தென் ஆப்ரிக்கா ஈரான் தூதரகம் அதன் எக்ஸ் பதிவில், ‘‘ஆட்சி மாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்தது’’ என கேலி செய்திருந்தது.
