கொடைக்கானல், ஏப். 5: கொடைக்கானலில் நேற்று பெய்த கோடை மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, சாலைகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து தடையானதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக கோடை ெவயினின் தாக்கம், மிகக்கடுமையாக இருந்து வந்தது. மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியான கொடைக்கானலிலும், வெப்பத்தின் அளவு குறைவின்றி காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை அடுத்துள்ள மாவட்டங்களில் நேற்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதன்படி திண்டுக்கல் மாநகரில் நேற்று நண்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
இந்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிச்சியான காற்று வீசியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், நத்தம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நேற்று நண்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை வறண்டுகிடக்கும் விவசாய நிலங்களில் கோடை உழவு பணிகளை தொடங்க உதவும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதியில் நண்பகல் 12.30 முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக பிற்பகலில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் எதிரொலியாக, வத்தலக்குண்டு மற்றும் பழநி பிரதான மலைச்சாலையை இணைக்கும் பெருமாள்மலை சாலையில், புலிச்சோலை அருகே ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதன் எதிரொலியாக சாலையை கடக்க முடியாமல் அந்த வழியாக வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கின. அதிலிருந்த சுற்றுலா பயணிகள். தங்கள் பயணத்தை தொடர முடியாடமல் கடும் அவதிக்குள்ளாயினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தினை வெட்டி அகற்றினர். இதன் எதிரொலியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
