மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர், ஏப். 8: கடலூர் மாவட்டம் வடலூர் வஉசி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பிரேம் ஆனந்த்(34). இவர் வடலூரில் தங்கியிருந்து அண்ணாமலை நகர் மருத்துவமனையில் நர்ஸ்சாக வேலை செய்த வாலாஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வநாராயணன் மகள் தனலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பிரேம் ஆனந்த் அடிக்கடி வெளிநாட்டிற்கு வேலை விஷயமாக சென்று வந்த நிலையில், 2015 டிசம்பர் மாதம் வெளிநாட்டில் இருந்து வடலூர் வந்த போது தனது மனைவி தனலட்சுமி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து தனலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தொடர்ந்து 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கம்போல காலையில் வெளியே போன தனலட்சுமி இரவு 10 மணிக்கு லேட்டாக வீட்டுக்கு வந்ததை கேட்டதால், கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த் தனது மனைவி தனலட்சுமி முகத்தில் கையால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து பிரேம் ஆனந்த் குற்றத்திலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும், தடயங்களை மறைக்க வேண்டி தனலட்சுமியின் துப்பட்டாவால் பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டி தொங்கவிட்டு நாடகம் ஆடி உள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில் வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் கடலூர் மகிளா நீதிமன்றம் வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் மனைவியை கொலை செய்த பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரேம் ஆனந்த் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜரானார்.

 

 

Related Stories: