வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட 75 பேர் வேட்புமனு ஏற்பு: 41 மனுக்கள் தள்ளுபடி

வேலூர், ஏப்.8: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 75 பேரின் வேட்பு மனுத்தாக்கல் ஏற்று கொள்ளப்பட்டது. 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி நிறைவடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில், வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ப.கார்த்திகேயன், அதிமுக வேட்பாளர் எஸ்ஆர்கே.அப்பு உள்ளிட்ட 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளராக ஏ.பி.நந்தகுமார், அதிமுக சார்பில் வேலழகன் உட்பட 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜேஸ்வரி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெகன்மூர்த்தி உட்பட 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பிரதாப்(தேமுதிக), அதிமுக வேட்பாளர் பரிதா உட்பட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் 25 பெண்கள், 91 ஆண்கள் என மொத்தம் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதற்கான வேட்பாளர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடந்தது. அதன்படி, வேலூர் தொகுதியில் 27 வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிமுக, திமுக உள்ளிட்ட 19 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

காட்பாடி தொகுதியில் 25 வேட்புமனுக்கள் பரிசீலனையில், திமுக, அதிமுக உட்பட 19 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அணைக்கட்டு தொகுதியில் 23 வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் திமுக, அதிமுக உட்பட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கே.வி.குப்பம் தொகுதியில் 20 வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உட்பட 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

குடியாத்தம் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் திமுக, அதிமுக உட்பட 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக உட்பட 75 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: