விழுப்புரம் அருகே சர்வீஸ் தண்டவாளத்தில் சென்ற ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை

விழுப்புரம், ஏப். 8: விழுப்புரம் அருகே சர்வீஸ் தண்டவாளத்தில் சென்ற ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்கான ரயில் இன்ஜின் நிறுத்தி வைக்கும் யார்டு மற்றும் சர்வீஸ் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் ரயில் இன்ஜின் ஒன்று பிற்பகல் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து கண்டம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளது.

அப்போது சர்வீஸ் தண்டவாளத்தில் பின்பக்கமாக செல்லும்போது எதிர்பாராதவிதமாக கடைசி எல்லை பகுதிக்கு சென்று தண்டவாளத்திலிருந்து ரயில் சக்கரம் கீழே இறங்கி தடம் புரண்டது. இதனால் ரயில் இன்ஜின் முழுவதுமாக தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. ரயில் இன்ஜினில் பெட்டிகள் ஏதும் பொறுத்தப்படவில்லை. அதில் பைலட் மட்டுமே 2 பேர் இருந்துள்ளனர். ரயில் இன்ஜின் தடம் புரண்டபோது பெரும் விபத்துக்கள் ஏற்படாததால் பைலட்டுகள் காயமின்றி தப்பித்தனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்வே ெதாழில்நுட்ப பணியாளர்கள் மற்றொரு சிறப்பு ரயில் மூலம் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம், கிரேன் மூலம் ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டது. முன்னதாக சேதமடைந்த சக்கரம், தண்டவாள பகுதிகளும் சீரமைக்கப்பட்டு ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இப்பணிகள் நடைபெற்றது.

மெயின் தண்டவாளத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் காட்பாடி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால் சர்வீஸ் லைன் என்பதால் மற்ற ரயில் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை. இதனிடையே விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரயில் தடம் புரண்டதற்கு காரணம் பைலட்டின் அலட்சியமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Stories: