சென்னை: நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம்; இந்த தேர்தல் மத நல்லிணக்கத்திற்கும் பாசிசத்திற்குமானது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதுகுறித்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உள்ள சிறுபான்மையின சமூக அமைப்பினருடன் அவர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்தியா முழுவதும் வெறுப்பு பிரசாரங்கள் நடந்தாலும், மதவாதம் தலைத்தூக்கி ஆடினாலும் தமிழகம் மட்டும் அமைதி பூங்காவாக இருந்து வருகிறது.
அதன் முழு முதல் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இன்றைக்கு வடமாநிலங்களில் மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது. கிறிஸ்துவர்கள் – இஸ்லாமியர்கள் மீது தாக்குதல், வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கின்றனர். அசாம் மாநில பாஜ முதல்வர் சமூக வலைதளத்தில் இஸ்லாமியர்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை பதிவிடுகிறார். இப்படி வடமாநிலங்களில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் சூழல் நிலவுகிறது. அதே போன்ற நிலையை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதை கனவாக பாசிச பாஜஅரசு கொண்டுள்ளது.
ஆனால் திமுக இருக்கும் வரை அது நடக்காது; எடுபடவும் முடியாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் முதல்முறையாக தீர்மானத்தை நிறைவேற்றினார். அதற்கு வழக்கும் தொடுத்துள்ளோம். அந்த மசோதா கொண்டு வரும்போது எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தார்.
என்னுடைய பொதுவாழ்க்கையில் ஏராளமான முறை கைது செய்யப்பட்டுள்ளேன். சிஐஏ போராட்டம் தான் முதலில் நான் கைது செய்யப்பட்டது. அதனை நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். இப்போது நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருந்து வருகிறோம். இந்த தேர்தல் மதநல்லிணக்கத்திற்கும் – பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தலாகும். நிச்சயம் இந்த தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
