பலத்த இழுபறிக்கு பின்னர், பா.ஜ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் குமரியில்தான் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகா சார்பில் போட்டியிடும் மாஜி எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப்பின் மகன் சைமன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளார். தற்போதும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 15ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
வழக்கமாக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே விவேகானந்தா கல்லூரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்படும். ஆனால், இம்முறை குமரி மேற்கு மாவட்ட பகுதி மக்களை கவரும் வகையில், குளச்சல் ராஜாக்கமங்கலம் அருகே பேயோடு அரசன்குழி பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 22 தேஜ கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
