சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் பவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கடந்த மார்ச் 15ம் தேதி அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அசாம், கேரளா, புதுச்சேரி, கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் வருகிற 9ம் தேதியும், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் வருகிற 23ம் தேதியும், மேற்கு வங்கத்தில் 2வது கட்டமாக 29ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் மக்களவை அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். இத்தகைய ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எந்த பிடித்தமும் செய்யப்படக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு முதலாளியும் அபராதத்திற்கு உள்ளாவார்கள்.

அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிக தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற தகுதியுடையவர்கள். தொழில்துறை அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்கள், தங்கள் தொகுதிக்கு வெளியே பணிபுரிந்தாலும், தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்திருந்தால், அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற தகுதியுடையவர்கள் (தற்காலிக மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் உள்பட) என்று ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகளை துல்லியமாக பின்பற்றுவதற்கும், அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாகவும் வசதியாகவும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் தேவையான உத்தரவுகளை அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிறப்பிக்குமாறு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: