தமிழகத்தில் மொத்தமுள்ள 72,032 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 72,032 வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக 72,032 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர், உள்துறை செயலாளர், காவல் துறை உயர் அதிகாரிகள், உளவுத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 41 வாக்கு எண்ணிக்கை மையங்கள், எல்லைச் சாவடிகள் மற்றும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுப்பது குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட உள்ள 72,032 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அர்ச்சனா பட்நாயக் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல், வாக்காளர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: