சென்னை: மேலூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பை நிறுத்தி வைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் தலையீடு காரணமா என்ற பரபரப்பு தகவல்கள் எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது. இந்த பட்டியலில் 9 இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு, குளச்சல், அறந்தாங்கி, உதகையில் பாஜ- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பென்னாகரம், மயிலாடுதுறை, சோளிங்கர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ்-பாமக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மீதமுள்ள 18 தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூருக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்த தொகுதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி அரசியல் களத்தில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. மேலூர் தொகுதி கடந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பாக டி.ரவிச்சந்திரன் போட்டியிட்டு சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் மாமனார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே மேலூர் தொகுதியை விடுத்து மதுரை வடக்கு தொகுதியை குறி வைத்து அவருக்காக மாணிக்கம் தாகூர் காய் நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தருவதாக கூறி மாணிக்கம் தாகூர் தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார். அதுமட்டுமல்ல, ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாணிக்கம் தாகூருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரசார் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மேலூர் தொகுதியை குறி வைத்து மாணிக்கம் தாகூர் காய் நகர்த்தி வந்த நிலையில் வேறு யாருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டால் செல்வப்பெருந்தகை தன் மீது பழி வரும் என நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, ‘மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் தான் தலையிடவில்லை என்றும் கட்சி தலைமையே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை கூட்டத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணிக்கம் தாகூருடனான மோதல் போக்கை தான் விரும்பவில்லை என்றும் மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இன்று மேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.
* 6 நாளில் தமிழ் குமரனுக்கு வாய்ப்பு
பாமக (ராமதாஸ்) எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகனான ஜி.கே.எம். தமிழ்குமரன் கடந்த மார்ச் 28ம்தேதி, பாமகவில் இருந்து பிரிந்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இணைந்த 6 நாளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பென்னாகரம் தொகுதியில் தற்போது இவரின் தந்தை ஜி.கே.மணி சிட்டிங் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் அஇபுதமமுகவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதுவரை பென்னாகரத்திற்கு ராமதாஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஒருவேளை ஜி.கே.மணியை நிறுத்தினால் தந்தையை எதிர்த்து மகன் போட்டியிடும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
