சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ சு.ரவி போட்டியிடுகிறார். இவர் கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து அரக்கோணம் தொகுதிக்கு வந்தார். அப்போது அவருக்கு புதுகேசாவரம் பகுதி மற்றும் தக்கோலம் பகுதிகளில் அனுமதியின்றி பொதுமக்களை கூட்டியது, பட்டாசு வெடித்தது, தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதுதொடர்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், தக்கோலம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், அரக்கோணம் அதிமுக வேட்பாளர் சு.ரவி, புதுகேசாவரம் ஊராட்சி மன்ற தலைவர் நவாஸ்அகமது உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளராக சரவணனை வரவேற்று, சோளிங்கரில் பல்வேறு முக்கிய இடங்களில் கடந்த 1ம்தேதி பட்டாசு வெடித்தது. அனுமதியின்றி கூட்டம் கூடியது, தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தது உள்ளிட்டவை நடந்தது. இதுகுறித்து நிலை கண்காணிப்புகுழுவினர் சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் பாமக வேட்பாளர் சரவணன் உள்பட 4 பேர் மீது போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாலுகா அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் 2வது நாளாக அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் தவெக வேட்பாளர் இம்தியாஸ் ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் மனுதாக்கல் செய்ய வரும்போது பேரணி நடத்தியும், அனுமதியின்றி கொடிகள் ஏந்தி வந்தும் மனுதாக்கல் செய்தார். இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தவெக வேட்பாளர் இம்தியாஸ் மீது ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
* சீமான், 8 வேட்பாளர் மீதும் வழக்கு
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, இரவு 10 மணியை கடந்தும் பரப்புரை மேற்கொண்டார். அதனால் வடக்கு போலீசார், சீமான் மற்றும் வேட்பாளர்கள் அபிநயா, தினேஷ்குமார், கார்மேகன், தமிழினியன், மேனகா, ராம்குமார், ராதாமணி, திவ்யா ஆகிய 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
