புதுச்சேரியில் இருந்து நேற்று வேலூர் வந்த லாரியுடன் ₹3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கமிஷனர் ஆய்வில் சிக்கியதால் பரபரப்பு

வேலூர், பிப்.19: புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த லாரியை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை பறிமுதல் செய்தார். மேலும் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல இடங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். நிரந்தரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆற்காடு சாலை வழியாக தனது காரில் சத்துவாச்சாரி நோக்கி சென்றார். காகிதப்பட்டறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு பார்சல் கடையில் லாரியில் இருந்து பொருட்கள் இறக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த கமிஷனர் சங்கரன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, பொருட்கள் இறக்கிக் கொண்டு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்கள் உள்ளிட்டவற்றை இறக்கி வைப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா, 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். மேலும் பார்சல் கடையிலும் சோதனை செய்தனர். அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து வந்த லாரி மற்றும் கடைக்கும் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம்.  பிளாஸ்டிக் பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை சேண்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி குடோனில் நிற்க வைத்துள்ளனர். கமிஷனர் ஆய்வில் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கிய சம்பவம் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: