குளச்சல்,ஏப்.2: மண்டைக்காடு அருகே புதூரை சேர்ந்தவர் சுரேஷ். கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அஸீனா (19). அந்த பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28 ம் தேதி தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் தனது ஊரை சேர்ந்த காதலன் ஷாஜன் (23) என்பவருடன் குளச்சல் போலீசில் தஞ்சமடைந்தார். போலீசார் இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்தனர். போலீசார் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாணவி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கி காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
