மதுரை, ஏப். 2: மதுரையில், ரயிலில் இருந்த பெண் பயணியிடம் நகைகள் வைத்திருந்த கைப்பையை திருடிய திருப்பூரை சேர்ந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து சம்பவத்தன்று மதுரை வந்த ரயிலில் இருந்த பெண் பயணியிடம், ஜன்னல் வழியாக அவர் நகைகள் வைத்திருந்த கைப்பையை திருடிக் கொண்டு இரு வாலிபர்கள் தப்பிச்சென்றனர். இதுகுறித்து அவர் மதுரை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் சாவித்ரி தலைமையில் தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து(30), சதீஸ்குமார்(35) ஆகியோர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் திருடிய 5 பவுன் தங்க நகைகளை மீட்டதுடன், கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
