அதிகரட்டி சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறை

மஞ்சூர், ஏப்.2: நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகம் அதிகரட்டி பிரிவுக்குட்பட்ட தரிகெடா பகுதியில் கடந்த சில தினங்களாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் சன்னிசைடு, கோடேரி, குன்னக் கொம்பை, ஆலாடாவேலி எஸ்டேட், கிரேக்மோர் எஸ்டேட், சட்டன் எஸ்டேட், கிளிஞ்சாடா ஆகிய பகுதிகளில் சுற்றி வருவதுடன் இந்த பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்செடிகளை நாசம் செய்து வருகிறது.

பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகே நடமாடுவதால் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து குந்தா ரேஞ்சர் செல்வகுமார் மேற்பார்வையில் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழையாமல் இருக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தேயிலை மற்றும் தோட்டப்பணிகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

 

Related Stories: