விழுப்புரம், ஏப். 2: சர்வதேச நகரமான ஆரோவில் பவுண்டேஷனில் ரூ.500கோடி ஊழல் புகார் சுமத்தப்பட்ட மாஜி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி மீதான விசாரணை என்னாச்சி என்னும், புகார் அளித்தவர்களுக்குமட்டுமே சம்மன் அனுப்புவதா என்று நேற்றையதினம் எஸ்பி அலுவலகத்தில் பெண்கள், சமூக ஆர்வலர்கள் புகார்அளிக்க குவிந்தனர். தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் சர்வதேச அமைதி நகரம் அமைந்துள்ளது. ெவளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது மட்டுமின்றி இங்கே தங்கியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்த ஆரோவில் பவுண்டேஷன் இருந்தாலும் அந்த இடத்திற்கான பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அனைத்தையும் தமிழக அரசும், காவல்துறையும்தான் கண்காணிப்பில் வைத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 2021ல் ஆரோவில் சேர்மனாக பொறுப்பேற்ற அப்போதைய தமிழக கவர்னரும், தற்போதைய மேற்குவங்க கவர்னருமான ஆர்.என் ரவி, செயலாளர் குஜராத் கேடர் ஐஏஎஸ் ஜெயந்தி ஆகியோர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆரோவில்லுக்கு சொந்தமான கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்களை குறைந்த விலைக்கு கொடுத்து, அதற்கு பதிலாக விலைமதிப்பில்லாத இடத்தை வாங்கி ஊழல் முறைகேடு செய்ததாக ஆரோவில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவமேஜர், அருண்அம்பதி, பிரபு, பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கடந்த மாதம் 5ம்தேதி விழுப்புரம் எஸ்பியிடம் தனித்தனியே புகார் மனு அளித்திருந்தனர்.
அதில் ஆரோவில் சேர்மன், ெசயலாளர் ரூ.350 கோடிவரை ஊழல் செய்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கூறியிருந்தனர். அதனைதொடர்ந்து மீண்டும் ஆரோவில் பகுதியில் ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை அதிமுக பிரமுகருக்கு விற்க முயற்சிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தக்கோரியும் 2வது முறையாக சமூகஆர்வலர் பியூஷ்மானுஷ் தலைமையில் விழுப்புரம் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரது தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஆரோவில்வாசி பெண்கள், 10க்கும் மேற்பட்ட ஆண்கள் இதுகுறித்து சுமார் 200 பக்கங்கள் கொண்ட புகைப்படம், ஆதாரங்களுடன் நேற்று மீண்டும் ஒரு புகார்மனுவை அளித்தனர். அப்போது சமூகஆர்வலர் பியூஷ்மானிஷ் கூறுகையில், தொடர்ந்து ஆரோவில் பகுதியில் சேர்மன் ஆர்என்.ரவி, செயலாளர் ஜெயந்தி செய்த நடவடிக்கைகளால் டவுன்ஷிப் போடுகிறோம் என்ற பெயரில் பெரிய அக்கிராமத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நிலத்தை ஊழல் செய்திருக்கிறார்கள்.
மரத்தை வெட்டியுள்ளார்கள். பெண்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் ஒருங்கிணைந்து தான் ஏற்கனவே நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம். நிறைய புகார் இருக்கிறது. ஏற்கனவே 3 புகார் கொடுத்திருக்கிறோம். ரூ.350 கோடி ஊழல் மற்றும் 18 ஏக்கர் ரூ.150 கோடி ஊழல் குறித்து புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது வந்தது பழைய புகார்கள் மண்திருட்டு, மரம் வெட்டியது. புகார்மீது 2 சம்மன் வந்திருக்கிறது. விசாரணை மந்தமாக இருக்கிறது. எங்களை மட்டும் விசாரிக்கிறார்கள். எதிர்தரப்பை அழைத்து விசாரிக்கவில்லை. ஆவணங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய ஊழல். 50ரூபாய் திருடினால் உடனே பிடித்து விடுகிறார்கள். ஆனால் ரூ.350 கோடி ஊழலை ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறோம். விசாரணை எதிர்பார்த்த அளவு கிடையாது. அவர்களுக்கு பயப்படாமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
