கடலூர், ஏப். 2: கடலூர் மஞ்சக்குப்பம் திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகு குமார் மனைவி ரூபிகா. நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்த 2 நபர்கள் உங்கள் கணவருக்கு தெரிந்தவர்கள், பத்திரிக்கை வைக்க வந்துள்ளோம் எனக் கூறி கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் திடீரென ரூபிகாவின் வாயில் துணியை வைத்து அழுத்தி, அவரது கழுத்தில் இருந்த தாலி செயின், பீரோவில் இருந்த செயின் என மொத்தம் 12 1/4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்தவுடன் கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தினர். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டனர். புதுநகர் போலீசார் கம்மியம்பேட்டை-செம்மண்டலம் சாலை அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர். விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் ரூபிகா வீட்டில் கொள்ளையடித்த நகை என்பதை ஒப்புக்கொண்டனர்.
தொடர் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராஜ் (எ) சந்தனராஜ் (27), கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மனைவி சுமதி (48) என தெரியவந்தது. சுமதி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ரூபிகா கணவர் ரகுகுமார் ஏற்கனவே அறிமுகமானவர் எனவும் கடந்த வாரம் அவர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் சுமதி கலந்து கொண்டதாகவும், அப்போது ரூபிகா தங்க நகைகள் அணிந்திருந்ததை பார்த்து கொள்ளையடிக்கலாம் என திட்டம் தீட்டி தனக்கு அறிமுகமான ராஜ் என்பவரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். சுமதிக்கு அறிமுகமான தஞ்சாவூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த அறிவழகன் மனைவி சுகுணா (30) என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுகுணாவுக்கு அறிமுகமான திருச்சி மாவட்டம் இ.புதூர் பகுதியை சேர்ந்த சீதாராமன் மகன் கிருஷ்ணராஜை (47) அழைத்து கொண்டு கடலூர் வந்து 4 பேரும் ஒன்றாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் சுமதி ரூபிகா வீட்டுக்கு அழைத்து சென்று அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்ட நிலையில், ராஜ், கிருஷ்ணசாமி, சுகுணா ஆகிய மூவரும் பத்திரிக்கை வைப்பது போல் வீட்டின் உள்ளே சென்று ரூபிகாவை கட்டி போட்டுவிட்டு 12 1/4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு சுமதி வீட்டுக்கு சென்று அங்கு நகையை வைத்துவிட்டு, பின்னர் கிருஷ்ணசாமி, சுகுணா ஆகிய இருவரும் தஞ்சாவூருக்கு சென்று விட்டனர். கொள்ளையடித்த நகையில் ஒன்றான ஒரு பவுன் செயின் நகையை விற்க சென்றபோது போலீசாரால் ராஜ் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய கிருஷ்ணசாமி, சுகுணா ஆகிய இருவரையும் தனிப்படையினர் திருச்சியில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் கொள்ளையடித்த 12 1/4 பவுன் தங்க நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரும் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
