விழுப்புரம், ஏப். 2: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே எஸ்.ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராதா(27). இவருக்கும் கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி மேல்அழிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ரகுநாதன்(39) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ரகுநாதன் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளாராம். இதனால் கடந்த 2017 ஜூன் 7ம் தேதி ராதா தனது கணவரிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கணவர் ரகுநாதன் மனைவி ராதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது ராதா மறுத்ததால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார் ரகுநாதன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி ரகுநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து ரகுநாதன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
