தர்மபுரி, ஏப்.2: புதிய 4 சட்ட தொகுப்புகளை அமல்படுத்துவதை எதிர்த்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், நேற்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மண்டல தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். ஆங்கிலேயர் காலத்தில் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கக்கூடாது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை அளிக்க வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்க கூடாது.
தொழிலாளர்களை அகதிகளாக்க கூடாது. 44 சட்ட தொகுப்புகளை 4 சட்ட தொகுப்புகளாக மாற்ற கூடாது என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து, ஏப்ரல் 1ம் தேதியை கருப்பு தினமாக கருதி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் கலாவதி, எல்பிஎப் மண்டல செயலாளர் சண்முகராஜா, ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், விசைத்தறி மாவட்ட செயலாளர் சாமிநாதன், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஏஐசிசிடியூ மாநில தலைவர் முருகன், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
