காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்

காரிமங்கலம், ஏப்.2: தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை வாகன சோதனை நடந்து வருவதால், காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தமாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை நேற்று முன்தினம் கூடியது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சந்தையில் 700 ஆடுகள், 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.45 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் விற்பனை ரூ.3 லட்சம் அளவில் இருந்தது. மொத்தம் ரூ.98 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. கடந்த சில வாரங்களாக, கால்நடை விற்பனை ரூ.2 கோடிக்கு மேல் நடந்து வந்த நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கால்நடை வியாபாரிகள் வருகை குறைந்ததாலும், பங்குனி உத்திர விழா எதிரொலியால் கால்நடை விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. தேர்தல் முடியும் வரை, வரும் வாரங்களிலும் கால்நடை விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: