தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பணம், மதுபாட்டில் கடத்தல் தடுக்க நடவடிக்கை: வேலூர் கலெக்டர், எஸ்பி சித்தூரில் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

வேலூர், பிப்.18: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் கலெக்டர், எஸ்பி ஆகியோர் நாளை சித்தூரில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் மூலம் பணம், மதுபாட்டில் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரசனைகள், கள்ளச்சாராயம், மது விற்பனை குறித்தும், அண்டை மாநிலம் வழியாக வரும் மதுபாட்டில்கள் குறித்தும் இருமாநில சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள வேலூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார் ஆகியோர் நாளை சித்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கின்றனர். அங்கு சித்தூர் மாவட்ட கலெக்டர், எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தேர்தல்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்து கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், இருமாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை பலப்படுத்துவது போன்ற பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இருமாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரசனை ஏற்படாமல் இருக்கவும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களின் வழியாக வாக்காளர்களுக்கு வழங்க கள்ளச்சாராயம், மதுபாட்டில்கள், பணம் ஆகியன கடத்தி வரப்படுவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் இருமாநில மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>