உபி மாநிலம் அமேதி மக்களவை தொகுதி தேர்தலில் தோற்ற பிறகு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பா.ஜவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் அசாம் தேர்தலில் முதன்முறையாக ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டுள்ளார். தேமாஜி மாவட்டத்தில் சிசிபோர்கான், ஜோனாய் ஆகிய இடங்களில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தத் தேர்தல் என்பது யாரையாவது சட்டமன்ற உறுப்பினராக்குவது பற்றியதோ அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மீண்டும் முதல்வராக்குவது பற்றியதோ அல்ல.
இது நம் நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவியவரையும் விரட்டியடிப்பது பற்றியது. முன்பு அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழக்கும் அளவிற்கு, தீவிரவாதம் எனும் இருண்ட மேகங்கள் மாநிலத்தை சூழ்ந்திருந்தன. தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள அனைவரும் இப்போது அச்சமின்றி தேசியக் கொடியை ஏற்றக்கூடிய ஒரு நிலையை எட்டியுள்ளோம். இந்தச் சிறப்பு மத்தியிலும் மாநிலத்திலும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தையே சாரும்.
வாக்காளர் பட்டியலில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்த விரும்பியபோது, காங்கிரஸ் ஏன் அதை எதிர்த்தது? அவர்கள் இந்தியர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்களா அல்லது ஊடுருவியவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்களா? முன்பெல்லாம், தங்கள் கணவர்கள் எங்கு வாக்களிக்கச் சொல்கிறார்களோ அங்குதான் பெண்கள் வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது, தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பெண்களே தங்கள் கணவர்களிடம் கூறுகிறார்கள்; ஆண்களும் அதற்கு இணங்குகிறார்கள். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், அரசியலில் அவர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். பிரதமர் மோடியின் தலைமையாலேயே இது சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு பேசினார்.
