திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து வரும் வாக்காளர்களை, படிவம் 6 விண்ணப்பங்கள் வாயிலாகப் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாகச் சேர்க்க பாஜ முயற்சிக்கிறது. குறைபாடுடையதும், குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதுமான எஸ்ஐஆர் நடவடிக்கை, லட்சக்கணக்கான மக்களுக்குக் கடும் இன்னல்களை ஏற்படுத்தி, பலரின் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் விளிம்பிற்கே தள்ளியது.
அதற்குப் பிறகு, மக்களின் ஜனநாயக உரிமங்களில் தலையிடுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜ மேற்கொள்ளும் மற்றொரு ஒருங்கிணைந்த முயற்சிதான் இது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை மேற்கு வங்க வாக்காளர்களாக மாற்றும் நோக்கில், ஒரே நாளில் சுமார் 30,000 ‘படிவம் 6’ விண்ணப்பங்களை பாஜ சமர்ப்பித்துள்ளது. இவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வழக்கமான விண்ணப்பங்களாகத் தோன்றவில்லை. மேற்குவங்கத்தில் வசிக்காதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஒரு வஞ்சகமான சூழ்ச்சி.
எனவே பிப்ரவரி 28 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான இத்தகைய விண்ணப்பங்கள் எதையும் பரிசீலிக்கக் கூடாது. இந்த விண்ணப்பங்கள்,மேற்குவங்கத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களையும், மாநிலத்துடன் எவ்விதமான சட்டபூர்வமான தொடர்பும் இல்லாதவர்களையும் சார்ந்தவையாக இருக்கலாம் என்ற தீவிரமான கவலைகள் எழுந்துள்ளன. பீகார், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கு முன்னரும் இதேபோன்ற போக்குகள் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை சட்டவிரோதமானவை, அரசியலமைப்புக்கு எதிரானவை. அடிப்படையில் ஜனநாயகத்திற்குப் புறம்பானவை ஆகும். இவை ஒரு தீய நோக்கத்தையும் உள்நோக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. ஒரு அரசியலமைப்பு அமைப்பிடம் எதிர்பார்க்கப்படும் தரநிலை இதுவல்ல. மக்களுக்குத் தகவல்களில் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையும், தங்கள் வாக்களிக்கும் உரிமங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமையும் உண்டு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
