குமாரபாளையம் அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் அதிரடி கைது

குமாரபாளையம், ஏப்.1: வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆம்னி வேனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா, ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28ம் தேதி வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்த இவர், தனது ஆம்னி வேனை, வீட்டின் முன் வீதியில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது வண்டியை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். நள்ளிரவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஆம்னிவேனை திருடி செல்வது பதிவானது. விசாரணையில், அவர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்வநாயகம்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விரைந்து செயல்பட்ட போலீசார் செல்வநாயகத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆம்னிவேனை மீட்டனர். பின்னர், குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், செல்வநாயகம் 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

Related Stories: