நாமகிரிப்பேட்டை அருகே முட்டை வாகனங்களில் ரூ.2.43 லட்சம் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை, மார்ச் 27: நாமகிரிப்பேட்டை அருகே, பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி முட்டை வாகனங்களில் கொண்டு வந்த ரூ.2.43 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் அருகே, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படை அலுவலர்கள் லலிதா, சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில், போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக இரண்டு முட்டை வாகனங்கைள நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாமக்கல் அடுத்த பரளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது வாகனத்தில், உரிய ஆவணமின்றி ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதே போல், பின்னால் வந்த ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவரின் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதலான பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் ராசிபுரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, பணத்தை பெற்றுச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: