மல்லசமுத்திரம், மார்ச் 24: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று கிருத்திகையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மூலவர் கந்தசாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. கோயில் வளாகம் முழுவதுமாக பலவகையான வண்ண மலர்கள், காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் உட் பிரகாரத்தில் உற்சவர் முருகன், ராமன், லட்சுமணன், சீதை, அனுமன் அலங்காரத்தில் கையில் வில் ஏந்தியவாறு சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தனர். பெண்கள் கோயில் முன்பாக நெய் தீபமேற்றி வழிபட்டனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
