நாமகிரிப்பேட்டை, மார்ச் 27: நாமக்கல் மாவட்ட எல்லையாக விளங்கும் மல்லூர் சோதனை சாவடியானது நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லும் பிரதான நெடுஞ்சாலை ஆகும். தேர்தல் காலங்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இச்சாலை கருதப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் சட்ட விரோதமாக பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக மல்லூர் சோதனை சாவடி, போலீசார், பறக்கும்படை அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தேர்தல் நேரத்தில் சாலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலாகும். ஆனால் மல்லூர் சோதனை சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் தேர்தல் விதிமீறி பணம் அல்லது பொருட்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
