கொல்லிமலையில் டூவீலர் திருடிய வாலிபருக்கு தர்மஅடி

சேந்தமங்கலம், மார்ச் 28: கொல்லிமலையில் டூவீலர் திருடிய சிவகங்கை வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், தின்னனூர் நாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(50). இவர் செம்மேடு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் இரவில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு வழங்கிடும் நோக்கில், சுமார் 11 மணி வரை கடையை திறந்து வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம், வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, இரவு 12 மணியளவில் கடையை பூட்டி விட்டு ஜெகதீசன் அப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது, கடை முன்பு அவரது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதில் சாவியை வைத்திருந்தார்.

அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்ததனர். அவர்களின் ஒருவர் திடீரென நைசாக ஜெகதீசனின் டூவீலரை திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்ப முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன், சத்தம் போட்டதுடன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வாலிபரை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவருக்கு தர்மஅடி கொடுத்ததுடன், வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மேல பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் ஜாகிர் உசேன்(22) என்பதும், நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா வந்த போது, டூவீலர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: