மல்லசமுத்திரம், மார்ச் 24: மல்லசமுத்திரத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்ெகாண்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மல்லசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 20 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 10 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் சஞ்சய் லாலா சாகிப் யாதவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்புக்கு பொருத்துப்பட்டுள்ள சிசிடிவி கேமரா நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, திருச்செங்கோடு தாசில்தார் மதியழகன், மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், எஸ்.ஐ., தங்கவடிவேல், கிராம நிர்வாக அதிகாரி தங்கராசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
