மதியம் 12-3 மணி வரை வெளியில் செல்லக்கூடாது

நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரிக்கும். எனவே பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவும். எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளையே உடுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணங்களின் போது போதுமான குடிநீர் எடுத்துச்செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க, அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும்.

குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். தங்களது வசிப்பிடத்தில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்புறத்தில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.

கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றுக்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அனைவருக்கும் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்பணியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான அளவிற்கு குடிநீர் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தொழிலாளர்கள் தங்களுடன் குழந்தைகளை அழைத்து வந்தால், அவர்களை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழலில் தங்கவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணியாளர்களை மதியம் கடும் வெயிலின் போது, பொது வெளியில் பணியமர்த்துவதை தொழில் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.

வானிலை ஆராய்ச்சி மையத்தால், வெயில் தாக்கம் குறித்து முன்கூட்டியே கணித்து தினமும் அளிக்கப்படும் எச்சரிக்கை விவரத்தை தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் மூலம் அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். வெயில் பாதிப்பால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மற்றவர் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் இருந்து, தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு வருபவர்கள், தாங்கள் வருகை புரிந்த பகுதியில் உள்ள வெப்ப நிலையை உடல் ஏற்றுக்கொள்ளும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்ல விடக்கூடாது. அடர்வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. கடும் வெயிலில் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கடுமையாக வேலைகளை செய்யக்கூடாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: