கெண்டைக்கால் காயத்துக்கு சிகிச்சை; தோனி இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே: 2 வாரம் ஆடமாட்டார் என அறிவிப்பு

 

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் தோனி (44), கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு மற்றும் காயத்தால் முதல் இரு வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆடமாட்டார் என்ற செய்தி, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஐபிஎல் 19வது சீசன் போட்டிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே துவங்கின. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனியின் கெண்டைக் கால் பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

அதன் காரணமாக அடுத்த 2 வாரங்கள் அவரால் போட்டிகளில் ஆட முடியாது என சிஎஸ்கே அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. அதன் பின் தோனிக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், கடந்தாண்டு நடந்த போட்டிகளிலும் அவர் சிரமப்பட்டே ஆடினார். அதன் காரணமாக தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு நடக்கும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள தோனி, சமீபத்தில் நடந்த சிஎஸ்கே ரோர் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய தோனி, வயது காரணமாக, தனது ஆடும் திறன் குறைந்து வருவதை ஒப்புக் கொண்டார். இந்நிலையில், கெண்டைக்கால் பகுதியில் காயத்தால் முதல் இரு வாரங்கள் அவர் ஆடமாட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி, கவுகாத்தியில் நாளை நடக்கும் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின், ஏப்ரல் 3ம் தேதி பஞ்சாப், 5ம் தேதி பெங்களூரு, 11ம் தேதி டெல்லி, 14ம் தேதி கொல்கத்தா, 18ம் தேதி ஐதராபாத், 23ம் தேதி மும்பை, 26ம் தேதி குஜராத், மே 2ம் தேதி மும்பை, மே 5ம் தேதி டெல்லி, மே 10ம் தேதி லக்னோ, மே 15ம் தேதி லக்னோ, மே 18ம் தேதி ஐதராபாத், மே 21ம் தேதி குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது.

Related Stories: