மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 2வது போட்டி, மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன் களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமாக ஆடிய இவர்கள், 3வது ஓவர் முதல் மும்பை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
இவர்களின் அதிரடியால் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறந்து, ராக்கெட் வேகத்தில் ரன்கள் உயர்ந்தன. ஷர்துல் தாக்குர் வீசிய 6வது ஓவரின் 2வது பந்தில் ஃபின் ஆலன் (17 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 37 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 10 பந்துகளில் 18 ரன்கள் விளாசி ஷர்துலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின், ரஹானே உடன் அங்கிரீஷ் ரகுவன்ஷி இணை சேர்ந்தார்.
இந்த இணை 36 ரன்கள் சேர்த்த நிலையில், 14வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர் மீண்டும் சிறப்பாக பந்து வீசி கைவரிசை காட்டினார். அடித்து ஆடப்பட்ட அந்த பந்தை ஹர்திக் பாண்ட்யா கேட்ச் பிடித்து ரஹானேவை (40 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி, 67 ரன்கள்) வெளியேற்றினார். பின், ரகுவன்ஷியுடன் ரிங்கு சிங் இணை சேர்ந்தார். இடையில் ரன் குவிப்பில் ஏற்பட்ட தொய்வை, இந்த இணை சிறப்பான ஆட்டத்தால் மாற்றி ரன் வேகத்தை உயர்த்தியது.
ரகுவன்ஷி, ரிங்கு சிங் 22 பந்துகளில் 50 ரன்களை வேட்டையாடினர். 18.1 ஓவரில் கொல்கத்தா 200 ரன்களை எட்டியது. ஹர்திக் வீசிய 19வது ஓவரில் ரகுவன்ஷி (29 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 51 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி, 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்குர் 3, ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, களம் இறங்கிய மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
* பவர் பிளேயில் பவர் காட்டிய கேகேஆர்
மும்பை அணிக்கு எதிராக முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்க வீரர்கள் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன், முதல் இரு ஓவர்களில் நிதானமாக ஆடி 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆனால், அதன் பின் மும்பை பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன்களை குவித்தனர்.
ஷர்துல் தாக்குர் வீசிய 6வது ஓவரின் 2வது பந்தில் ஃபின் ஆலன் அவுட்டானார். பவர் பிளேயில் வீசப்பட்ட 6 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 78 ரன்களை குவித்திருந்தது. குறிப்பாக, ஹர்திக் பாண்ட்யா வீசிய 4வது ஓவரில் மட்டும் ரஹானே 2 சிக்சர், ஆலன் 3 பவுண்டரிகள் விளாச, 26 ரன்கள் கிடைத்தது.
* 300 போட்டிகளில் ஆடி மும்பை உலக சாதனை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று ஆடிய போட்டி, அதன் 300வது டி20 போட்டியாக அமைந்தது. இதன் மூலம், 300 டி20 போட்டிகளில் ஆடிய முதல் உரிமை அணி (பிரான்சைஸ் டீம்) என்ற உலக சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று படைத்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரையான 299 போட்டிகளில் மும்பை அணி, 162ல் வெற்றி பெற்றுள்ளது. 131 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகள் டையில் முடிந்தன. 2 போட்டிகளில் முடிவு அறிவிக்கப்படவில்லை.
