பெங்களூரு: ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றதை தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், இந்தாண்டு ஐபிஎல் முதல் போட்டியின்போது துவக்க விழா உற்சாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. அதனால், போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், டாஸ் போடப்பட்டது. அதில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2வது ஓவரை வீசிய ஜேகப் டஃபி சிறப்பாக பந்து வீசி திணறடித்தார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மா (7 ரன்), டிராவிஸ் ஹெட் (11 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் இஷான் கிஷணும், நிதிஷ் குமார் ரெட்டியும் இணை சேர்ந்தனர். 5வது ஓவரை வீசிய ஜேகப், தனது 3வது விக்கெட்டாக நிதிஷ் குமாரை ஒரு ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால், 29 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. இருப்பினும், அதன் பின் இணை சேர்ந்த இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த இணை 97 ரன்கள் விளாசிய நிலையில் கிளாசன் 31 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின்னும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இஷான் கிஷண் (38 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி, 80 ரன்), அபிநந்தன் சிங் வீசிய 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், அனிகேத் வர்மாவின் (18 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 43 ரன்) அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு, 201 ரன் குவித்தது. அதையடுத்து, 202 ரன் இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. ஆர்சிபி அணி 15.4 ஓவரில் 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
