மயாமி ஓபன் பைனலில் சீறி பாயும் சின்னர்: ஏறி அடிக்கும் ஜிரி

 

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு, இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா முன்னேறி உள்ளனர். மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். முதல் செட்டில் கலக்கலாய் ஆடிய சின்னர் எளிதில் புள்ளிகளை குவித்தார். கடைசியில் அந்த செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். தொர்ந்து நடந்த 2வது செட்டில் ஸ்வெரெவ் சுதாரித்து ஆடியதால் டைபிரேக்கர் வரை நீடித்தது. இருப்பினும், டைபிரேக்கரில் சிறப்பாக ஆடிய சின்னர், 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.

அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா, பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ் களம் கண்டனர். துவக்கம் முதல் அநாயாசமாக ஆடிய லெஹெக்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சின்னர் – லெஹெக்கா மோதவுள்ளனர்.

மகளிர் இரட்டையரில் இத்தாலி இணை அபாரம்
மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று இத்தாலி வீராங்கனைகள் ஜாஸ்மின் பாலினி, சாரா எர்ரானி இணை, பெல்ஜியத்தின் எலிஸே மெர்டென்ஸ், சீனாவின் ஜாங் ஸுவாய் இணையுடன் மோதியது. இப்போட்டியின் முதல் செட்டில் இத்தாலி இணை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தபோது, மெர்டென்ஸ், ஜாங் இணை காயத்தால் வெளியேறியது. அதனால், ஜாஸ்மின், சாரா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Related Stories: