திருவள்ளூர், மார்ச் 31: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியதால் மோப்பநாய், வெடிகுண்டு சோதனை கருவி உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போலீசார் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை வரும் 7ம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெறுதல் 9ம் தேதி நடக்கிறது. அன்று மாலை வேட்பாளர் இறுதிபட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவும், மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
எனவே, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சு.ரவிச்சந்திரனிடம், வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் மோப்பநாய், வெடிகுண்டு சோதனை கருவி உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு, போலீசார் பரிசோதனைக்கு பின்னர் வேட்பாளர் மற்றும் உடன் வருபவர்கள் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, 100 மீட்டருக்கு அப்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், (31ம் தேதி) இன்று மகாவீரர் ஜெயந்தி, 3ம் தேதி புனித வெள்ளி, 5ம் தேதி ஞாயிற்றுகிழமை விடுமுறை நாட்கள் என்பதால், வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதோபோல், கும்மிடிப்பூண்டி, பொன்னோரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
