பூந்தமல்லி அருகே வானகரத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.5 கோடி பறிமுதல்

பூந்தமல்லி, மார்ச் 29: தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகரம்-அம்பத்தூர் சர்வீஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ.5 கோடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் வைத்திருந்த பணம் டாஸ்மாக் கடைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கலெக்ஷன் பணம் என்றாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வருமானவரி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.‌ பணத்தை அதிகாரிகள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆவணங்கள் காண்பித்தால் பணத்தை திருப்பி கொடுக்கவும் இல்லையென்றால் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: