வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு அடுப்பிற்கு மாறிய ஓட்டல்கள், டீ கடைகள்

திருவள்ளூர், மார்ச் 29: திருவள்ளூரில், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், டீ கடைகளின் உரிமையாளர்கள் விறகு அடுப்பிற்கு மாறி வருகின்றனர். ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரால், கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உணவக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு, பல சிறிய ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. திருவள்ளுர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காஸ் சிலிண்டர் விநியோகத்தினர் மூலம் சிலிண்டர் கிடைக்காத சூழலைப் பயன்படுத்தி, இடைத்தார்கள் கள்ளச்சந்தையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் விதவிதமான உணவு பண்டங்களை தயாரிக்க முடியாமல் ஓட்டல் உரிமையாளர்கள் திணறி வருவதால், சில குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே தயார் செய்து வருகின்றனர்.

இதில் இட்லி, பொங்கல், பரோட்டா, சப்பாத்தி போன்று ஒரே நேரத்தில் வேகவைக்கும் உணவு பொருள்கள் தான் பெரும்பாலான ஓட்டல்களில் தற்போது விற்பனைக்காக வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஓட்டல்களின் உரிமையாளர்கள் வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பு மற்றும் விறகு கரிக்கு மாறி வருகின்றனர். திறந்தவெளி இட வசதியிருக்கும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் இந்த நிலைக்கு மாறி வருகின்றனர். மேலும், சில ஓட்டல்களில் மாற்று இடத்தில் விறகு அடுப்பு வைத்து பிரியாணி போன்ற உணவுகளை சமைத்து, வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் திறந்தவெளி இடவசதி இல்லாத ஓட்டல்களின் உரிமையாளர்கள் மின்சார குக்கர் மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: