தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தீவிர விஜய் ரசிகரான இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவர் கிருஷ்ணா நகரில் தளபதி மொபைல்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடையின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் நடிகர் விஜய்யின் புகைப்படங்கள், தவெக கட்சிக்கொடி புகைப்படம் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைத்திருந்தார்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் காவல்துறையினர் அவரது மொபைல் கடையின் வெளியே இருந்த டிஜிட்டல் போர்டுகளை அகற்றியது மட்டுமின்றி கட்சிக் கொடியுடன் விஜய் இருந்த புகைப்படங்களை மறைத்தனர். மேலும் அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு மற்றும் புகைப்படங்கள் வைத்திருந்ததாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மொபைல் கடை உரிமையாளர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மொபைல் கடை உரிமையாளர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல்துறையினர் தனது கடையில் போர்டுகள் அகற்றியது பற்றி சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையினர் தெரிவித்து இருந்தால் அதை நானே அகற்றி இருப்பேன். வேறு புகைப்படங்களை வைத்திருப்பேன். என்னுடைய பெயரும் விஜய் தான். நானும் தளபதி தான்டா, போலீசார் அகற்றுவதை எவனெல்லாம் வெளியிலிருந்து பார்த்து சிரித்தானோ, என் வீடியோ பார்த்து ரசித்தானோ, அவங்க சாவு கொடுமையாக இருக்கும். விபத்தில் சாவீர்கள்.
இல்லை தூக்கு மாட்டி சாவீர்கள். இல்ல தீக்குளிச்சு சாவீர்கள். உங்களுக்கு நல்ல சாவே வராது. நான் வயிறு எரிஞ்சு சொல்கிறேன். என் கடையை பார்த்து சிரித்தவர்களுக்கு நல்ல சாவே வராது எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று கையில் வேலுடன் வீடியோவில் பேசியபடி கழுத்தை அறுத்து விடுவேன் என்று தனது சைகை மூலமாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், ‘எங்க ஊரில் திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்தி உள்ளனர். தேர்தல் முடியும் வரை அவர்கள் கையை வெட்டி விடுங்கள். தேர்தல் முடிந்த பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஒட்டிக் கொடுங்கள்’ என்று கூறுகிறார். இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
