ஜெகன்மூர்த்தியை தோற்கடிப்போம் பாஜ சபதம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் கடந்த 2021ல் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றார். அவருக்கு மீண்டும் அதிமுக சார்பில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக வழங்கிய ஒரே ஒரு தொகுதி தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி நிர்வாகிகளை அழைத்து பூஜை ஜெகன் மூர்த்தி அவசரக் கூட்டம் நடத்தினார். அவருக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கியதற்கு ஏற்கனவே தொகுதி அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

அந்த தொகுதியை கேட்டு பாஜ பெண் நிர்வாகி ஒருவரும் காய்நகர்த்தி வந்தார். ஆனால் ஜெகன் மூர்த்திக்கு வழங்கியதால் பாஜ சார்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட லத்தேரியை சேர்ந்த வேலூர் மாவட்ட பாஜ செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதில், ‘ஜெகன்மூர்த்தி பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு செய்த துரோகங்கள். கண்டிப்பாக கே.வி குப்பம் சட்டமன்றத்தில் இம்முறை தோல்வி அடைய வைப்போம். கடந்த 5 வருடங்களாக நம்மளை மதிக்காத ஒரு நபர் மீண்டும் போட்டியிடும் போது கண்டிப்பாக நம்மளை மதிக்காத நபரை நாம் மதிக்க மாட்டோம்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த ஸ்டேட்டஸ் பிரச்னை மாவட்ட அதிமுக, பாஜ, புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: