சென்னை: திமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்துள்ளது. மகளிர் சாதனையில் திமுக ஆட்சியின் பெருமைகள் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழொளி பரப்புகிறது என்று திமுக புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து, திமுக வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் எந்த மாநிலமும் எண்ணிப்பார்க்காத புதிய புரட்சிகரமான திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து நிறைவேற்றி வரும் மு.க.ஸ்டாலின் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி உலகில் தொழில் முகவர்களாக உயர்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார். ஆண்களுக்கு நிகராக தொழில்தொடங்க ஆர்வம் கொண்டுள்ள 32 ஆயிரத்து 332 மகளிர் தொழில் முனைவோருக்கு 191 கோடியே 23 லட்சம் ருபாய் கடன் வழங்கி அவர்களை தொழில் முனைவோர் ஆக்கியுள்ளார்.
இப்படி தொழில்புரியும் மகளிரை ஊக்கப்படுத்தி தேவையான உதவிகள் அனைத்தையும் திராவிட மாடல் ஆட்சி செய்துவருவதால் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் இந்தியாவிலேயே மிக அதிகமான பெண் தொழில் முனைவோர் இருப்பது தமிழ்நாடு தான் என்னும் உண்மை உரக்கச் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 26 ஆயிரமாக இருந்தது.
அந்த எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்து, 2024-25ம் நிதியாண்டில், 9 லட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு என்பது குன்றின் மேலிட்ட விளக்காகப் புகழொளி பரப்புகிறது.
அதே நேரத்தில், பி.ஜே.பி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிட்டால் அங்கு சிறு, குறு மற்றும் நடுத்தரப் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வெறும் 2.18 லட்சம்தான். அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சியை விடக் குறைந்து, 3.36 லட்சமாகதான் உள்ளது. அண்மைச் சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் 2024-25ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியே முதல் இடத்திலும் முன்னிலையிலும் திகழ்வதை பறைசாற்றுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
