சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காணும் வகையில் திமுக குழுவுடன், காங்கிரஸ் குழு நேற்று அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் சிட்டிங் தொகுதிகளான தென்காசி, விருத்தாசலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. 2 சிட்டிங் தொகுதிகளை திமுகவால் எங்களுக்கு கொடுக்க இயலவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே நாங்கள் நின்ற தொகுதி. அதை மீண்டும் பெற்றுள்ளோம். 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுவிட்டோம். மீதமுள்ள 5 தொகுதிகள் குறித்து மீண்டும் அமர்ந்து பேசி, முடிவு எடுக்க உள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை தற்போது கேட்டு இருக்கிறார்கள். இதுபற்றி பேசி முடிவெடுக்க வேண்டும். அதேபோன்று, ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கேட்கிறார்கள். எங்கள் வேட்பாளருக்கு ஒரு பிரச்னை உள்ளது. அதுபற்றி முதல்வரிடம் பேசி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகள். மேலும் மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் விவரம்: பொன்னேரி (தனி), வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள்.
