புதுச்சேரியில் ஆட்சியை தீர்மானிக்கும் சுயேச்சைகள்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதுவரை 14 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் குறைந்தபட்சம் ஒருவராவது சுயேச்சையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாகி வருகின்றனர். அந்த வகையில் 1964ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் புஸ்ஸி – அஷ்ரப், உப்பளம் – பெருமாள் ராஜா, உழவர்கரை – தாமோதரன், திருபுவனை – குழந்தை, குருவிநத்தம் – சுப்ரமணிய படையாட்சி, பாகூர் – தங்கவேல், காரைக்கால் தெற்கு – முகமது இப்ராகிம் என 6 பேர் சுயேச்சையாக வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து, 1969ல் மாகேவில் குமரன், ஏனாமில் காமிசெட்டி பரசுராமன் ஆகியோரும், 1974ல் ஏனாமில் காமி செட்டி பரசுராமனும், 1977ல் காரைக்கால் வடக்கு தொகுதியில் காந்தி, மாகேவில் ராகவன், பள்ளூர் தொகுதியில் சந்தரசேகரன் ஆகியோரும், 1980ல் காரைக்கால் தெற்கு தொகுதியில் சாலி மரைக்காயர், ஏனாம் தொகுதியில் காமிசெட்டி பரசுராம் ஆகியோரும் சுயேச்சையாக வெற்றி வாகை சூடினர். 1985ல் நடந்த தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் சவுந்தரராஜன், காரைக்கால் தெற்கு தொகுதியில் ராமசாமி ஆகியோரும், 1990ல் திருநள்ளாறு தொகுதியில் கமலக்கண்ணனும், 1991ல் முதலியார்பேட்டையில் சபாபதி, பாகூரில் ராஜவேலு, கோட்டுச்சேரியில் நளமகாராஜன் ஆகியோரும், 1996ல் காசுக்கடை தொகுதியில் ப. கண்ணன், ஏனாமில் மல்லாடி கிருஷ்ணா ராவ், 2001ல் அரியாங்குப்பத்தில் ஜெயமூர்த்தி, ஏனாமில் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

2006ல் ஊசுடு தொகுதியில் ஏழுமலை, வில்லியனூர் தொகுதியில் நாராயணசாமி, நெடுங்காடு தொகுதியில் மாரிமுத்து ஆகியோரும், 2011ல் நிரவி தொகுதியில் வி.எம்.சி.சிவக்குமாரும், 2016ல் மாகேவில் ராமச்சந்திரன், 2021ல் முத்தியால்பேட்டையில் பிரகாஷ்குமார், உருளையன்பேட்டையில் நேரு, உழவர்கரையில் சிவசங்கர், திருபுவனையில் அங்காளன், திருநள்ளாறில் பி.ஆர்.சிவா, ஏனாமில் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோரும் சுயேச்சை எம்எல்ஏவாக வெற்றி பெற்றனர்.

இதில் அதிகபட்சமாக 1964 மற்றும் 2021ல் தலா 6 பேர் சுயேச்சை எம்எல்ஏ ஆக வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்துள்ளனர். மேலும், சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களே பல முறை புதுவையில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக கைகொடுத்துள்ளனர். கடந்த 2011ல் என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல்வர் ரங்கசாமி 15 இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால், ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் நிரவி தொகுதியில் வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் ஆதரவுடன் முதல்வர் ரங்கசாமி ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதனால் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பிரதான கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் என்ஆர் காங்., காங்கிரஸ், திமுக, பாஜ, லஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் சீட் கிடைக்காத அதிருப்தியில் பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, முத்தியால்பேட்டையில் பிரபாகர், நெல்லித்தோப்பில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், உழவர்கரையில் சரவணன், தட்டாஞ்சாவடியில் சேதுசெல்வம், கதிர்காமம் தொகுதியில் அழகானந்தம், நெடுங்காடு தொகுதியில் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இதில் சிலர் சுயேச்சையாக வெற்றி பெற்று சட்டசபைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: