சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ராமநாதபுரம் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் குப்புராமுவை விட 50,479 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பாஜவுக்கு ஒதுக்கி படுதோல்வியை சந்திக்க நிலையில், இந்த முறை அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் பாஜவுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரே சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புக் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாஜவினரும் பதிலடியாக கருத்துகளை பதிவிட்டு வருவதால் கூட்டணி கட்சியினர் இடையிலான கருத்து மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சார்பில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டர்களில், ‘`என்டிஏ கூட்டணி தலைமையின் கவனத்திற்கு… ராமநாதபுரம் தொகுதியை பாஜவுக்கு வழங்கியதை எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவண்: அதிமுக தங்கச்சிமடம் நகர் கழகம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்குள் நிலவும் பூசலை வெட்ட வெளிச்சமாக்கும் இந்த போஸ்டர்களால் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தொகுதி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி வேட்பாளர் குப்புராமு படுதோல்வியை தழுவினார். ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் சென்டிமென்ட் தொகுதி என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த முறை அதிமுகவிற்கு தான் ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். ஆனால், உள்கட்சி கோஷ்டிப்பூசலை காரணம் காட்டி தொகுதியை பாஜகவிற்கு தள்ளிவிட்டு விட்டார். இதனால், மீண்டும் தொகுதியை இழக்கும் நிலைமையே நிலவுகிறது. ராமநாதபுரத்தை பாஜ கட்சிக்கு ஒதுக்கிய முடிவை எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இதுவே மாவட்டம் முழுக்க உள்ள அதிமுகவினரின் எதிர்பார்ப்பு’’ என்றனர்.
இதேபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கூட்டணியில் உள்ள தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு அதிமுக போட்டியிட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், பி.எஸ்.சேகர் உள்ளிட்டோர் சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தனர். அதேபோல் பாஜவும் குடந்தையில் போட்டியிட ஆர்வம் காட்டியது. ஆனால் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது கூட்டணி கட்சியான தமாகாவுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட கும்பகோணம் தொகுதியை அறிவித்து கட்சியின் மாநில செயலாளர் எம்.கே.ஆர்.அசோக்குமார் வேட்பாளர் என உறுதியாகி உள்ளது. இதனால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாமக குளக்கரை உள்பட கும்பகோணத்தில் நேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தலைமை பரிசீலிக்க வேண்டும், கும்பகோணத்தை இலை ஆள வேண்டும்’. அம்மாவின் விசுவாசிகள் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
* அதிமுக மாஜி எம்எல்ஏ விலகல் மாவட்ட செயலாளர் மாற்றுக்கட்சிக்கு செல்ல முடிவு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில் உழைப்பவர்களுக்கு பதவியில்லை. உண்மையானவர்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் பதவி என்றால் நாங்கள் எங்கே செல்வது?. அதிமுகவில் உழைப்பவர்களை கண்டு கொள்வதில்லை. பாளை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் திமுக, அந்த தொகுதியை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காது.
அதேபோல் 7 முறை நாங்குநேரி தொகுதியில் அதிமுக வென்றிருக்கிறது. எனினும் அமமுகவுக்கு ஒதுக்கியதால் கனத்த இதயத்தோடு விலகுகிறேன் என்று கூறியுள்ளார். இதேபோல தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்கியதால் தஞ்சை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரத்தினசாமி, இத்தனை நாட்கள் வேலை பார்த்தது வீணாகிவிட்டது என்ற எண்ணத்தில் மாற்றுக் கட்சிக்கு செல்லலாமா என்று அவரது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
