சென்னை: தனது பெரம்பூர் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ள நிலையில் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போடுவதாக விஜய் கூறினார். தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் இன்று தனது பரப்புரையைத் தொடங்க திட்டமிட்டு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி மனு அளித்தனர். மேலும், அந்த மனுவில் ஒவ்வொரு இடத்திலும் 3000 பேர் கூடுவார்கள் எனவும் தெரிவித்து இருந்தனர். தவெகவினர் மனுவில் குறிப்பிட்டிருந்த இடத்தை ஆய்வு செய்த காவல் துறையினர், அந்த இடத்தில் 3000 பேர் கூட முடியாது என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தவெக சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகர காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிச தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/3/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?
இந்நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூட முடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியை தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
