சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கோவையிலிருந்து நேற்று விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தனித்துப் போட்டியிடும் நாங்கள், எங்கள் வேட்பாளர் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்போம். 60லிருந்து 70 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் 63 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மக்கள் பிரச்னைக்காக இதுவரையில் ஒரு போராட்டம் கூட நடத்தியது கிடையாது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும், அதிமுக டெபாசிட் இழந்தது. சட்டசபை தேர்தலில் கூட, அதிமுக 50, 60 தொகுதிகளில் டெபாசிட் வாங்க முடியாமல் பலவீனமாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் நல்லாட்சி கொண்டுவர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டோம். அவர்கள் எங்களை உதாசீனப்படுத்தி புறம் தள்ளுகின்றனர். அமித்ஷா கோட்டையில் உட்கார வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் எடப்பாடி செயல்படுகிறார்.எனவே, அதிமுக, பாஜ இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகி வெகு தூரம் வந்துவிட்டது.
