அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்: இரட்டை இலை 1, தாமரை 1

சென்னை: அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி இரட்டை இலை சின்னத்தில் ஒரு தொகுதியிலும், தாமரையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடப்போவதாக ஏ.சி.சண்முகம் அறிவித்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைமையில் 4 முனை போட்டி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை சின்னத்திலும், மற்றொன்றில் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று தெரிவித்தார். அதன்படி, அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதியை பாஜ ஒதுக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

Related Stories: