பழநியில் பாஜவை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தான் போட்டியிடுவார் என கூறி அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், தொகுதி பங்கீட்டில் பழநி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் பாஜவினர் ஏமாற்றமடைந்தனர். கடந்த 2 நாட்களாக கட்சி தலைமையை பாஜ தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று காலை பழநி இடும்பன்குளம் – இட்டேரி சாலையில் உள்ள பாஜ அலுவலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர், தேங்காய்களை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர். இதுகுறித்து பாஜ தொண்டர்கள் கூறுகையில், ‘‘2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் பழநி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வியடைந்தது. எனவே, இந்த முறை பாஜவுக்கு பழநி தொகுதியை வழங்கவேண்டும்’’ என்றனர். தேங்காய் உடைப்பு போராட்டம் நடந்த போது சதீஷ் என்னும் தொண்டர் கட்சி அலுவகத்தின் மாடியில் இருந்து கீழே குதிக்க முற்பட்டார். அவரை கட்சியினர் சமாதானம் செய்து கீழே இறக்கினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, பழநி தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் ஆனந்தகிரி 1வது தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு தொகுதியை தங்களுக்கு ஒதுக்காத அதிமுகவை கண்டித்து பாஜவினர் 25க்கும் மேற்பட்டோர் தேங்காய்களை உடைத்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘பழநி தொகுதியில் பாஜ போட்டியிட வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கள பணிகள் செய்துள்ளோம். எங்கள் கருத்துகள் புறந்தள்ளப்பட்டுள்ளது. பழநி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கிய முடிவை கட்சி தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றனர்.
